நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழாவில் மக்கள் முன் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன்.
தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு
மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.
விடுதலை எளிதாக கிடைக்கவில்லை; 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் கிடைத்தது. சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம்.
முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்;
இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும்.
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் .
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹20,000ல் இருந்து 21,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் 11,000-ல் இருந்து 11,500ஆக உயர்த்தி வழங்கப்படும் . வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ₹10,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.