விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது
அதன்படி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எதிர்வரும் அக் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதன்படி 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் செப்டம்பர் 15ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்த மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 22ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் என்றும் வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.
மேலும், வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள செப்டம்பர் 25ம் தேதி கடைசி நாள் என்றும் அக் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட இடங்களுக்கான தேர்தலில் 9 மாவட்டங்களில் மொத்தம் 33 ஆயிரத்து 971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.