சென்னை பாரி முனையில் சுமார் 70 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டிடம் (old building) இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரி முனையில் அமைந்துள்ள அர்மேனியன் தெருவில் உள்ள இந்த கட்டிடத்தை ராயல் ஸ்டில்ஸ் என்னும் நிறுவன உரிமையாளர் வாங்கிய நிலையில், அந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று காலை கட்டிடப் பணியில் வழக்கம் போல ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில், பலத்த சத்துத்துடன் கட்டிடம் திடீரென இடிந்த விழுந்து தரைமட்டமானதில், அருகாமையில் இருந்த வீடுகள், கடைகள் என 5க்கும் மேற்பட்ட கட்டிடங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கட்டிடங்களில் ஏற்பட்ட விரிசலில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், நவீன உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதனை அடுத்து விபத்து நடந்த இடத்திற்கு சென்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் பழமையான இந்த கட்டிடத்தை (old building) புதுப்பிக்கும் பணிக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.