வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டீஸ் இனத்தினர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதற்கு குக்கி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 3ம்தேதி இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.
கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் கொளுத்தினர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. அதிரடி விரைவு படை, ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே நேற்று முன்தினம் மணிப்பூர் சென்றார். அப்போது, அங்குள்ள மக்களுக்கு ராணுவ படையினர் அளிக்கும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பிரேன் சிங், ஆளுநர் அனுசுயா உய்கே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நவீன ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மணிப்பூரின் பல பகுதிகளில் நேற்றுமுதல் ஈடுபட தொடங்கினர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட, பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட கடும் சண்டை மூண்டது. மொத்தம் 12 இடங்களில் தீவிரவாதிகளுக்கும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் கூறுகையில்,‘‘ குக்கி தீவிரவாதிகள் தாக்குதலின்போது எம்-16, ஏகே-47, ஸ்னைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். மெய்பீஸ் இனத்தினர் வீடுகளின் மீது தீ வைத்து எரிக்க முயன்றனர்.ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது.
இதில் 40 தீவிரவாதிகள் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட குக்கி தீவிரவாதிகள் பலரை ஜாட் படை பிரிவு வீரர்கள் கைது செய்துள்ளனர் ’’ என்றார்.இதற்கிடையே, இம்பால் மேற்கு உரிபோக்கில் உள்ள பாஜ எம்எல்ஏ கிவைரக்பாம் ரகுமணி சிங்கின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்துகொளுத்தியதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடிக்க தொடங்கியுள்ளதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்பாலுக்கு புறப்பட்டு செல்கிறார். மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இம்பாலில் அவர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.