சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை (annamalai) மீது அவதூறு தகவல்களை வெளியிட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (annamalai) கடந்த மாதம் 14 ம்தேதி நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்துக்கள் குவித்துள்ளதாக பேசியிருந்தார். அதையடுத்து, அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏராளமான தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் நேரலை செய்திருந்தனர்.
அந்த காணொளியில், சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் துபாய் சென்றார். அப்போது அங்குள்ள நிறுவனங்களில் அவர் முதலீடு செய்ததாகவும், தேர்தலின் போது அந்த நிறுவனங்களின் மூலமாக பணம் பரிமாற்றம் நடத்தப்பட்டது எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் வெளியிட்டதாக கூறி பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு தலைமை வழக்கறிஞர் தேவராஜன் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஆதரவை முதலமைச்சர் பெறுவதை ஏற்று கொள்ள முடியாததால் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
அதையடுத்து, இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி மனு மீதான விசாரணையை 8 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.