நாகையில் வாலிபர், கூலி படையினரால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் பட்டப்பகலில் வாலிபரை மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை தர்ம கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபாண்டி.
தற்போது நாகை கூக்ஸ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதல் மனைவி கமலி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், நாகை மஹாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த இரண்டாவது மனைவி சத்யாவுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தனது நண்பர்கள் வினோத், ரவிகணேஷ் ஆகியோருடன் சிவபாண்டி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இரண்டு இருசக்கர வாகனங்களில் நாகை அபிராமி சன்னதி திடல் அருகே வந்த மூவரையும் அவ்வழியே வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் மறித்து வெட்டத்தொடங்கினர்.
இதனை கண்டு உயிர்பயத்தால் அங்கிருந்த நண்பர்கள் வினோத் மற்றும் ரவிகணேஷ் ஆகியோர் தப்பியோடிய நிலையில் சிவபாண்டியை கூலி படையினர் கழுத்து மற்றும் தலையில் சராமாரியாக வெட்டினர். இதனால் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில் மூளை சிதறி சிவபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பட்டப்பகலில் நடந்த படுகொலை சம்பவத்தால் அங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்ட நிலையில் அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். கொலை நடந்த இடத்தில் நாகை எஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீசார் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும், மோப்பநாய் உதவியுடனும் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவருடைய நண்பர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற காவல்துறை அதிகாரிகள், கொலை செய்யப்பட்ட சிவபாண்டி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரவுடி பட்டியலில் உள்ள கொலை செய்யப்பட்ட சிவபாண்டி மீது 1 கொலை வழக்கு, 3 கஞ்சா வழக்குகள், 5 சாராய கடத்தல் வழக்குகள், 2 அடிதடி வழக்குகள் என 11 வழக்குகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
கொலை சம்பவம் தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் தனிப்படை அமைத்துள்ள நிலையில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.