மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் யாராவது உள்ளே சிக்கி இருக்கிறார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தொழிற்பேட்டை அண்ணா சாலையில் யாசகி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம்செயல்பட்டு வரும் நிலையில், அங்கு கார்களுக்கு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் ஒயர்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு ஷிப்டுக்கு 1000 தொழிலார்கள் என 3 ஷிப்டுகளாக பணிபுரிகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென தொழிற்சாலையின் ஸ்டோர் அறையில் இருந்து தீப்பொறி கிளம்பி உள்ளது.
இதனை பார்த்ததும் தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடிவந்து விட்டனர். இதையடுத்து, தொழிற்சாலையினுள் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர், ஒரகடம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது . இதனிடையே அசம்பாவிதம் ஏதும் நடந்தால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதால் அப்பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் மறைமலைநகர் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் தீ விபத்தில் தொழிற்சாலையினுள் ஊழியர்கள் யாராவது சிக்கி உள்ளார்களா? என்பது பற்றி முழுவிபரம் தெரியவில்லை.
முழுமையாக தீயை அணைத்த பிறகே இது குறித்த விபரம் தெரிய வரும் என தெரிவித்துள்ள போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.