உலகில் சிலர் தங்களுக்கு பிடித்தமான விசித்திரமான பணிகளைச் செய்ய விரும்பி அதன் மூலம் தங்களுக்குத் தேவையான வருவாய் ஈட்டிக் கொள்வதை பார்த்திருப்போம்.
அதை போன்று தான் சீனாவில் ஒரு பெண் தன்னுடைய பெற்றோருக்கு மகளாய் இருப்பதற்காக சம்பளம் பெற்று வருகிறார்.
சீனாவில் வசித்து வரும் 40 வயதுடைய நியானன் என்ற பெண் சுமார் 15 ஆண்டுகளாக செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த வேலையில் தினமும் செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதால் நிம்மதி இல்லாமலும், மிகுந்த அழுத்தம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது. இதனால், மன உளைச்சளுக்கு ஆளான அவரை கவனித்த நியானனின் பெற்றோர், அவரிடம் மனம் விட்டு பேசி அவருக்கு ஒரு சுவாரசியமான ஆலோசனையை வழங்கியுள்ளனர்.
அதன்படி, “எங்களுக்கு மாதம் 10,000 யுவான் அவாவது இந்திய மதிப்பில் ரூ.1.17 லட்சம் ஓய்வூதியமாக கிடைத்து வருகிறது. நீ உன் வேலையை விட்டுவிடு..நீ இப்படி கஷ்டப்பட வேண்டாம்.. உன் பொருளாதார தேவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இதற்காக 4,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,000 சம்பளமாக உனக்குத் தருகிறோம். நீ எங்களுக்கு முழு நேர மகளாக இருந்தால் போதும்” என்று கூறியுள்ளனர்.
பெற்றோரின் இந்த ஆலோசனையை முழு மனதாக ஏற்றுக்கொண்ட நியானன் முழு நேர மகளாக இருக்க ஒப்புக்கொண்டார். இந்நிலையில், தற்போது இந்த வேலை அன்பு, காதல் நிறைந்த ஒரு பணியாக இருப்பதாகவும், இதனால் மன அமைதி மற்றும் நிம்மதியுடன் தங்கள் பெற்றோருக்குத் தேவையான பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாகவும் நியானன் கூறியுள்ளார்.