தேனி மாவட்டத்தில் அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் செல்பி எடுத்த போது, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி சிவராம் நகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். குமார் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், மனைவி தனது மகன் சதீஷ்குமார் உடன் வசித்து வந்துள்ளார். சதீஷ்குமார் தேனியில் உள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஞாயிறு விடுமுறை என்பதால் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் தேனி அல்லிநகரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார். நண்பர்களுடன் கோவிலுக்கு மேற்குப்புறம் உள்ள மலைப்பகுதியில் வழுக்குப்பாறை என்ற இடத்துக்கு சென்ற அவர், அந்த வழுக்குப்பாறையில் நின்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது கால் தவறி பாறையில் இருந்து வழுக்கி விழுந்தார்.
சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், பாறையின் இடுக்கில் உள்ள தண்ணீரில் சதீஷ் குமார் மூழ்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், சதீஷை மீட்க முயன்றும் முடியாததால், இந்த சம்பவம் குறித்து தேனி அல்லிநகரம் போலீசாருக்கும், தேனி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்களும், அல்லிநகரம் போலீசாரும் சதீஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு சதீஷை பலத்த காயங்களுடன் இரவு மீட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மலையில் இருந்து தரைப்பகுதிக்கு கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சதீஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.