தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவருக்கு வயது 61.
1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமான ஆர்.என்.ஆர் மனோகர், பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் தென்னவன், புன்னகை பூவே போன்ற படங்களுக்கு உரையாடல்களை எழுதிய ஆர்.என்.ஆர் மனோகர், தென்னவன் படத்தில் விவேக்கைக் கொல்ல முயற்சிக்கும் ஒரு குண்டராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அத்துடன் நடிகர் அஜித்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தில், சலீம், கவண், ஆண்டவன் கட்டளை, காஞ்சனா 3, சீறு, பூமி, காப்பான் போன்ற பல படங்களில் வில்லன் வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களிடையே புகழ்பெற்றுள்ளார்.
இவர் 2009-ம் ஆண்டு மாசிலாமணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் என்ற காவல் துறை குறித்த நாடகத் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் மனோகர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.