நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66.
நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகன் ஆர். எஸ். சிவாஜி. ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமான ஆர்.எஸ்.சிவாஜி, அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.
மேலும் லக்கி மேன், கோலமாவு கோகிலா, உள்ளிட்ட 60க்கும் மேறப்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கார்கி படத்தில் சாய்பல்லவிக்கு அப்பாவாக நடித்த இவர் நடிப்பிற்காக பலரது பாராட்டையும் பெற்றார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நேற்று நடைபெற்ற உலக சினிமா விழா தொடக்க விழாவில் பங்கேற்ற ஆர்.எஸ்.சிவாஜி, விழாவை முடித்து இல்லம் திரும்பிய நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவரின் உடல் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது மகள் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.சிவாஜியின் உடலுக்கு திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.