மாஸ்டர் படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓப்போ மொபைல் போன் தயாரிப்பு நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது 50 நாடுகளில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம், முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்ததை அடுத்து சென்னை, டெல்லி, மும்பை உட்பட நாடு முழுதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய நிறுவனங்கள், அதற்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் என அனைத்து தரப்பிலும் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஓப்போ மொபைல் போன் தலைமை அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மொபைல் போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகம், பாரத் எப்.ஐ.எச், என்ற தொழிற்சாலை உட்பட 20 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி கையாளுவதல், அந்த பொருட்களை இடம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளில் மாஸ்டர் படத் தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அடையாறில் உள்ள கஸ்துரிபாய் நகரில் உள்ள அவரது இல்லம், ஆதம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 2வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனை வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.