வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் சந்திரபாபு நாயுடு அடியெடுத்து வைக்கமுடியாது என நகரி தொகுதி எம்.எல்.ஏ வும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, சட்டப்பேரவையில் ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் கட்சியினர், சந்திரபாபு நாயுடுவையும் அவரது குடும்பத்தையும், அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதனால் சட்டமன்றத்தில் ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு, தான் வெற்றி பெற்று முதல்வரான பிறகே சட்டமன்றத்திற்குள் நுழைவேன் என்றும் அதுவரை சட்டமன்றத்திற்குள் நுழையப்போவதில்லை என கூறிவிட்டு வெளியேறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேச முயற்சித்தபோது கதறி அழுதார். முன்னாள் முதல்வர் அழுத காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் இதுகுறித்து நகரி எம்.எல்.ஏ ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கூறுகையில், “பெண் பாவம் பொல்லாதது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் என்னை அநியாயமாக ஒரு ஆண்டு காலம் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்க விடாமல் தடை விதித்தனர். பெண் என்றும் பாராமல் என்னை அவதூறு கேலி செய்தனர். அன்று சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு நாள் முழுவதும் வெயிலில் காத்திருந்தேன். கண்ணீர் வடித்தேன்.
இதற்கெல்லாம் ஒருநாள் சந்திரபாபு நாயுடு பதில் சொல்ல வேண்டி வரும் என நினைத்தேன். அந்த நாள் இன்று வந்துவிட்டது. இன்னும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் உள்ளது.
அதன் பிறகும் கூட அவர் வெற்றி பெறுவது, முதல்வராவது என்பது கனவில் கூட நடக்காது. எனவே கடவுள் அவரை வாழ்நாள் முழுவதும் சட்டமன்றத்தில் அடி எடுத்து வைக்க விடாமல் செய்து விட்டார் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.