ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில், உணவுப் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருபது ஆண்டுகளாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றது. அதனை தொடர்ந்து ஆகஸ்டு 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைத்த தாலிபன்கள் பல்வேறு கட்டுபாடுகளையும் விதித்தது.
மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் பல்வேறு உலக நாடுகளும் அந்த நாட்டிற்கு வழங்கிய பொருளாதார உதவிகள் மற்றும் பல்வேறு உதவிகளையும் நிறுத்தியது. அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளது.
மறுபுறம் ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தலீபான்களை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்டி பொருளாதாரத்தை மேம்படுத்த தலீபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் தங்களின் பட்டினி போராட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.
அதில் “நானும் என் கணவரும் பட்டினி கிடக்கலாம், ஆனால் எங்கள் குழந்தைகளால் பசியை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அவர்கள் பசியால் அழுகிறார்கள், இதனை சமாளிப்பது மிகவும் கடினம் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர்கள் மாலையில் ஒருவேளை உணவு தான் சாப்பிடுவதாகவும் சில நேரங்களில் ஒருவேளை உணவு கூட சாப்பிடாமல் தூங்குவதாகவும் கூறியுள்ளார்.
வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் பட்டினியால் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.