உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 13 வது லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதல் பொறுப்புடன் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது . தொடக்கம் முதலே ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர் .
இதையடுத்து 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது . இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை லீக் சுற்றில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு கிரிக்கெட் வீரர்களை , ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் . உலக கோப்பை தொடர்களில் 14 தொடர் தோல்விகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.