கடந்த 10 ஆண்டுகால அதிமுகவின் ஆட்சியில் மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்கள் அவர்களது நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய எடப்பாடி பழனிசாமி..
“ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 முதல் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 100 அடிக்கு மேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் முதல்-அமைச்சர், ஜூன் 12-ஆம் தேதியே மேட்டூரில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டார்.
ஆனால், போதுமான தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வராததால், செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிவரை குறுவை சாகுபடி முழுமைக்கும் இந்த திமுக அரசால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால், சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார்.
எரியும் நெருப்பை நீர் கொண்டு அணைப்பதற்கு பதில், பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்வதுபோல், ஜூலை மாதமே மேட்டூரில் தண்ணீர் இல்லை என்றவுடன், கர்நாடகத்தில் உள்ள தன் கூட்டாளி காங்கிரஸ் அரசுடன் பேசி, குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் பெறாதது மட்டுமின்றி, தமிழக விவசாயிகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடும் செயலிலும் ஈடுபட்டுள்ளார் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின். மேலும், மக்களை வஞ்சிப்பதையே தொழிலாகக் கொண்ட திமுக, ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய நிதி வழங்காத அவலமும் நிலவுகிறது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுகவின் ஆட்சியில் மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணம் என்றும், வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்கள் அவர்களது நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு.
எனது தலைமையிலான அதிமுக அரசு வறட்சிக் காலமான 2017-2018ஆம் ஆண்டில், சுமார் 15.18 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 31.71 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு காப்பீடு செய்யப்பட்டு, பிரீமியம் தொகைக்காக 651 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. மேலும், வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு நிவாரணம் ஆகியவை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனுக்குடன் செலுத்தப்பட்டு, விவசாயிகளின் உண்மையான தோழனாக அதிமுக அரசு திகழ்ந்தது என்று கூறியுள்ளார்.