வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘ஜாவத்’ புயல், இன்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நெருங்கி, நாளை ஒடிசாவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழக மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை புயலாக வலுப்பெற்றது.
இதற்கு ‘ஜாவத்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரபி மொழியில் ஜாவத் என்றால், கருணை மற்றும் பெருந்தன்மை என்று பொருள்.இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள முதல் புயல் ஜாவத்.
இந்த புயல் நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே, 360 கிலோ மீட்டர் துாரத்தில் இருந்து, மணிக்கு 22 கி.மீ., வேகத்தில், கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.இன்று காலையில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கும். பின், வடக்கு திசையில் திரும்பி, ஒடிசாவின் புரி அருகே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.