நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டசபை அனைத்து கட்சி கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சட்டசபையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது கவர்னர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பாமல் வைத்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். சட்டசபையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது. நீட் விலக்கு தீர்மானம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளது.
நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தீர்மானத்துக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு அளித்துள்ளது. நீட் விலக்கு குறித்து தமிழக கவர்னர், மத்திய உள்துறை மந்திரியை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற கவர்னரை அனைத்துக்கட்சிகள் சார்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.
நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.