அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கும் வகுப்புகளும் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது தேர்வுக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் எனவே எந்த கல்லூரியும் திறக்கக்கூடாது என்றும் இதனை மீறி கல்லூரி நடத்தப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சரின் ஆலோசனையின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாகவும், அனைத்து பல்கலைக்கழக தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.