ஆந்திர மாநிலம் ₹135 கோடி மதிப்பில் கால்நடைகளுக்கான மருந்தகத்துடன் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்துதாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் கால்நடைகளுக்கான மருந்தகத்துடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆந்திர அரசால் வளர்ப்பு கால்நடைகளுக்கு சிறந்த மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் சுமார் ₹278 கோடி மதிப்பில் மொத்தம் 340 ஆம்புலன்சுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
இதில் முதற்கட்டமாக ₹135 கோடி செலவில் 165 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு வீதம் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இணையான அதிநவீன வசதிகளுடன் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்படுகின்றன.
1962 என்ற எண் இலவச ஆம்புலன்ஸ் சேவைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. கால்நடைகளின் ஆரோக்கிய பிரச்னையை ஏதேனும் இருந்தால் கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே ஆம்புலன்ஸ் வாகனம் சென்று மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.
இந்த ஆம்புலன்சில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவியாளராக இருப்பார். 20 வகையான பரிசோதனைகள் மற்றும் 15 வகையான ரத்த பரிசோதனைகள் செய்ய நுண்ணோக்கி பொருத்தியுடன் அடிப்படை மருத்துவ சேவைகளுக்கும் மற்றும் அனைத்து வகையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுடன் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றுவதற்கான ஹை ஹைட்ராலிக் வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .