இருநாட்டுடனான போட்டி மோதலாகிவிடக்கூடாது’ என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் சீன அதிபரிடம் பேசியிருப்பதாக வெளியான தகவலையடுத்து அமெரிக்கா சீனாவிற்கு அடிபணிந்து போகிறது என விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளது.
உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது.
தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இடையே சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா- சீனா உறவுகள் குறித்த தேசிய கமிட்டி கூட்டம் நடந்தது.
இதில் அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி காட்சி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீன அதிபர் கூறும்போது, “பழைய நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
ஜோபைடன் கூறும்போது, “நாடுகள் இடையேயான போட்டிகள் எளிமையாக, நேரடியானதாக இருக்க வேண்டும். அது மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது சீன-அமெரிக்காவின் தலைவர்கள் என்ற முறையில் நமது பொறுப்பு என்று தோன்றுகிறது” என்றார்.
ஜின்பிங் பேசும்போது, “உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து சீனா-அமெரிக்காவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் உறவுகள் நேர்மறையான திசையில் முன்னோக்கி செல்கின்றன” என்றார்.
அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.