Tamilisai explains Amit Shah controversy : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசை சௌந்தர்ராஜனை மிரட்டிய வீடியோ வைரலான நிலையில், அதற்கு தற்போது தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
வைரலான அந்த வீடியோ பதிவில், ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் மேடையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன் அமித் ஷா பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக அமித் ஷாவை சந்தித்து வணக்கம் தெரிவித்துவிட்டு செல்ல முயல்கிறார்.
இதையும் படிங்க : விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : எடப்பாடிக்கு ஓபிஎஸ் கோரிக்கை!
அந்த சமயம் தமிழிசையை அழைத்துப் பேசிய அமித்ஷா, கோபமான முகத்துடன் அவரைப் பார்த்து, ஒற்றை விரலைக் காட்டி எச்சரிக்கிறார்.
பதிலுக்கு தமிழிசை ஏதோ பேச முன்வரும் போது அதை கேட்கவே தயாராக இல்லாத அமித் ஷா தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்பது போல முரட்டுத்தனமாக பேசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த விழா முடிந்து சென்னை திரும்பிய தமிழிசையிடம் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல், வழக்கம்போல கலகலவென்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.
மறுபக்கம், அமித் ஷாவின் அவமரியாதையான இந்த நடத்தைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் (Tamilisai explains Amit Shah controversy),
“2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று தான் நான் ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தேன்.
அப்போது மேடையில் தேர்தலுக்குப் பிந்தைய சவால்கள் பற்றி கேட்டறியவே அவர் என்னை அழைத்துப் பேசினார்.
மேலும், அமித் ஷா தமிழகத்தில் எனது தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார்.
அனைத்து தேவையற்ற யூகங்களையும் தவிர்த்து, தெளிவுபடுத்துவதற்காகவே இந்த விளக்கம்” என தமிழிசை தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.