ஆடி மாதம் என்றாலே அம்மன் நினைவு வந்து விடும். ஆடி மாதம் கடக மாதம். சந்திரனுக்கு உரிய மாதம். சந்திரன் தாயைச் சுட்டும் கிரகம். எல்லோரும் தங்கள் தாயாகக் கருதுவது அம்மனைத்தான். எனவே, சந்திரன் அம்மனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இந்த மாதத்தில் தந்தை கிரகமாகிய சூரியன், தாய்க் கிரகமாகிய சந்திரனின் இல்லத்தில் பிரவேசிக்
கிறார். சக்தியும் சிவனும் ஒன்றாகி நின்ற இம்மாதத்தில், சக்தியின் அம்சம் தூக்கலாக அருள் ஆட்சி செய்கிறது. நம் சமய மரபில் தாய்மைக்கு பெருமதிப்பு உண்டு.
அம்மனுக்கு தனி ஆலயங்கள் உண்டு.
ஆண் தெய்வங்களுக்குத் தனிக்கோயில் இருந்தாலும், அக்கோயிலிலும் தாய்த் தெய்வத்திற்கு தனி இடம் உண்டு. சைவ ஆலயங்களும் வைணவ ஆலயங்களும் தாயின் பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றன. சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் என்றும், புண்டரீகவல்லி சமேத கோவிந்தராஜ பெருமாள் என்றும் அழைக்கப்படும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது. ஆனால், அம்மன் கோயிலை அழைக்கின்றபோது, நேரடியாக காளியம்மன், மாரியம்மன், செல்லியம்மன் என்று அம்மன் பெயரை மட்டும் சொல்லியே அக்கோயிலைக் குறிப்பிடுவர்.
தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் இருந்தாலும் கூட, ஒவ்வொரு கோயிலிலும், ஆண்டில் ஏதேனும் ஓரிரு நாட்களோ அல்லது சில நாட்களோ மட்டும் விழாக்கள் நடைபெறும். ஆனால், ஆடி மாதத்தில் மட்டும் தமிழகத்தின் பெரும் கோயில்களிலும், கிராமத்து கோயில்களிலும் ஆடிப் பெருவிழா, மாதம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும். முக்கியமாக கிராம மக்கள், மன மகிழ்ச்சியோடு, தங்கள் சொந்த வீட்டு விழாவாக தங்கள் தங்கள் ஊர்களில் உள்ள ஆலயங்களில் முழு ஈடுபாட்டோடு கொண்டாடுவர்.
இந்தச் சிறப்பு வேறு எந்த மாதத் திருவிழாவுக்குமில்லை. முளைப்பாரி, செடல் எடுத்தல், கரகம், தீச்சட்டி ஏந்துதல், மாவிளக்கு, பால்குடம், பூக்குழி என எத்தனை எத்தனை விதமோ, அத்தனை அத்தனை கோலாகலம் ஆடியில் நடக்கும். கிராமக் கோயில்களில், எளிய மக்கள், தாங்கள் தொன்று தொட்டு பின் பற்றி வந்த மரபை கொஞ்சமும் மாற்றாமல் உற்சாகமாகக் கொண்டாடுவர்.
தாங்கள் உண்ணும் எளிய உணவையே அம்மனுக்கு வைத்துப் படைப்பர். தங்களுக்குத் தெரிந்த பாடல்களையே தாலாட்டு, ஒப்பாரி என்று விதம்விதமாக பாடுவர். எந்த ஆகம விதிகளும் அந்நிய மொழிகளும் அவர்கள் ஈடுபாட்டிலும், வழிபாட்டிலும் குறிக்கிடுவதில்லை. அம்மனை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக, தங்கள் தாயாக, மகளாக, தங்களுக்குத் துணை நிற்கும் காவல் தெய்வமாகக் கருதுகின்ற அந்தப் பிணைப்பு ஆடிமாத அம்மன் திருவிழாவில் துடிப்பாக இருக்கும். அதுவே இவ்விழாக்களில் சிறப்பாகவும் இருக்கும். எத்தனை அம்மன்கள்? எத்தனை வழிபாடுகள்? எத்தனை விதமான நேர்த்திக் கடன்கள்? அதில் சிலவற்றை ஒரு தொகுப்பாகக் காணலாம்.
மருதாணி பூசிக்கொள்ளும் மதன மதுரவல்லி
மதுரை மேலமாசி வீதியில் மதன கோபால சுவாமி ஆலயத்தில் உள்ள