மக்களை மகிழ்ச்சியாக வாழ வைத்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
மக்களை மகிழ்ச்சியாக வாழ வைத்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார்.
மகாபாரத்தில் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதே போல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை வாமணன் காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார்.
பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் திருநாள் அறுவடைத் திருநாள். ஓணம் திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும் திருநாள். தமிழர்களின் கலாச்சாரமே எல்லோரும், எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பது தான். ஓணம் திருநாள் வலியுறுத்துவதும் அதை தான். அந்த வகையில் தமிழ் பண்பாட்டிற்கும், ஓணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கியத்திலும் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன.
அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பது தான் ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தி. அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.