இந்த நேரத்தில் தென் தமிழகத்தில் இருக்கவேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லியில் கூட்டணி கூட்டத்திற்கு சென்று இருப்பது, தமிழக மக்களின் மீது திமுகவின் அக்கறையின்மையை, அப்பட்டமாகத் தெளிவுபடுத்துவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
இயற்கை பேரிடரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள், அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி, அவதியுற்று நிற்கும் போது, போர்க்கால அடிப்படையிலே, புறப்பட்டு வர வேண்டிய மாநில அரசு, தன் கையாலாகாதனத்தினால், திறமையில்லா நிலையினால், வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் மீதும், அரசின் மீதும் குறைகளைச் சொல்லிக் கொண்டே, மீட்பு நடவடிக்கைகளை தொடங்காமல், முடங்கி கிடப்பதால், மக்கள் துன்பம் மேலும் அதிகரிக்கிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் எல்லாம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அடுத்த வேளை உணவிற்கு கூட அவதிப்பட்டு, நின்று கொண்டிருக்கும் வேளையிலே, அடுத்த தேர்தலின் அரசியல் கூட்டணியை இறுதி செய்வதற்காக தமிழக முதல்வர், இந்திக் கூட்டணி தலைவர்களை சந்திப்பதற்காக, டெல்லி சென்று இருப்பது, தமிழக மக்களின் மீது திமுகவின் அக்கறையின்மையை, அப்பட்டமாகத் தெளிவுபடுத்துகிறது.
ஆட்சி என்பது திமுகவை பொறுத்த வரையில் கமிஷன் வாங்கவும், ஊழல் செய்யவும், கனிமம் திருடவும், ஆற்று மணலை அள்ளிச் செல்லவும், கொள்ளையடிக்கவும் மட்டும்தான் பயன்படுகிறதே, தவிர மக்கள் நலத்தைப் பற்றியோ, மக்கள் முன்னேற்றத்தைப் பற்றியோ, இதுபோன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் பற்றியோ, எந்த அக்கறையும் இல்லாமல் திமுக அரசு செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது.
இயற்கைக் கோள்களின் மாறுபாட்டால், இடியும், மழையும் பெய்து கொண்டிருக்கும்போது, செயற்கைக்கோள்கள் சரியில்லை என்று மகா விஞ்ஞானி மனோ தங்கராஜ் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி, எரியும் மக்கள் வயிற்றில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார். இயற்கைப் பேரிடர் என்பது இரண்டு நாளுக்கு முன்னரே முன்னறிவிப்பு சொல்லிவிட்டு முகம் காட்டுவதில்லை.
திடீரென்று ஏற்படும் இந்த ஆபத்தான சூழலை சமாளிக்கும் ஆற்றலும், திறமையும் திமுக போன்ற மாநில அரசுகளுக்கு இருக்க வேண்டும். அப்படி ஆற்றல், திறமை இல்லாவிட்டால் கூட மாநில முதல்வருக்கு மக்கள் மீது அக்கறையும் கரிசனமாவது இருக்க வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், சென்னை வெள்ளத்தில் 4000 கோடி ரூபாய் காணாமல் போனதைப் பற்றி அக்கறை இல்லாமல், புவியின் மட்டத்தையும் கடலின் மட்டத்தையும் அளந்து பார்த்துக் கொண்டு அறிவியல் பேசிக் கொண்டிருப்பது அபத்தமானது.
அதேபோல தென் மாவட்ட மழைக்கு வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்வதும் நகைப்பிற்கிடமானது. தென் மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தலைவர்கள் எல்லாம் சேலம் மாநாட்டில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிமுக்கிய பணியில் இருப்பதால், மக்கள் பணி செய்ய எவருக்கும் நேரமில்லை. ஆபத்தான இந்த நேரங்களில் மக்கள் எதிர்பார்ப்பது ஆறுதலை மட்டும்தான், அதைக் கூட சரியான நேரத்தில் வழங்க மாநில அரசு முன்வரவில்லை என்றால் மாறுதலை எதிர்பார்ப்பது தவிர மக்களுக்கும் வேறு வழி இல்லை.
அடுத்த நான்கு நாட்களுக்கு பாதயாத்திரை தொடர்பான பணிகள் கைவிடப்படுகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் உறவுகள் அத்தனை பேரும் தென் மாவட்டங்களின் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியிலே அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியிலே எங்களை முழு வீச்சில் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறோம்.
மத்திய அரசிடமிருந்து இருந்து எவ்வளவு விரைவாக நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியுமோ அதை எல்லாம் நாங்கள் வலியுறுத்தி, செய்து கொண்டிருக்கின்றோம். தமிழகத்தின் நான்கு தென்மாவட்டங்களில், கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை எதிர்கொள்வதற்காக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கும், வெள்ளப் பாதிப்பின் கடுமை குறித்த விவரங்களை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, நடவடிக்கைகள் மேற்கொள்ளக் காரணமாக இருந்த மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரண்டு கட்டுப்பாட்டு அறைகளும், நிலைமையை முழுவதுமாகக் கண்காணித்து வருவதோடு, தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கி வருகின்றன.
தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய மாநில துறைகளுடன், தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கத் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மேலும், மீட்புப் பணிகளுக்காக, இந்திய ராணுவம் சார்பாக, இன்று காலை 10 மணியளவில், திருவனந்தபுரம் மற்றும் வெலிங்டனில் இருந்து, இரண்டு பட்டாலியன் ராணுவ வீரர்கள் தென் மாவட்டங்களுக்கு வந்துள்ளனர். இந்திய கடற்படை சார்பாக, இந்திய கடற்படையின் மீட்புக் குழுக்கள் மற்றும் ஒரு இலகுரக ஹெலிகாப்டர் மற்றும் ஜெமினி படகுகள் ஆகியவை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்திய கடற்படை மீட்பு குழுவினர், ஐஎன்எஸ் கட்டபொம்மனில் இருந்து 25 பேரையும், எக்ஸ் பருந்துவில் இருந்து 13 பேரையும் மீட்டுள்ளனர். மேலும், மழை வெள்ளத்தால், ரயில்களில் சிக்கித் தவித்தவர்களுக்கு, இந்திய கடற்படை குழுவினர் உணவுப் பொட்டலங்களையும் வழங்கியுள்ளனர். இந்திய விமானப்படை சார்பாக, IAF MI-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மற்றொரு ஹெலிகாப்டரும் நாளை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
இந்திய கடலோர காவல்படை சார்பாக, தண்ணீர் பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் பொருள்களோடு, 6 கடலோரக் காவல்படை ஜெமினி பேரிடர் மீட்புக் குழுக்கள், மற்றும் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டருடன் கூடிய சுஜய் கப்பல் ஆகியவை, தூத்துக்குடி தளத்தில் இருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காகவும், மீட்பு/நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் கடலோரக் காவல்படையின் இரண்டு சிறு விமானங்களும், ஒரு இலகுரக ஹெலிகாப்டரும் மதுரையில் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்காக, தூத்துக்குடியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் மையத்தில் இருந்து, இலகு ரக காற்றுப் படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் கயாக் வகை படகுகள் உள்ளிட்டவை, மீட்பு வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாக தூத்துக்குடி விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து மூலம் மீட்புப் பணி கடினமாக உள்ளது. எனவே அருகிலுள்ள விமானத் தளங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் ஆராயப்படுகின்றன.
தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பாக, தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தென் தமிழகத்திற்கு மொத்தம் 6 மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த 6 குழுக்களும் விரைவில் பாதிப்புக்குள்ளான இடங்களை அடைவர். கூடுதலாக, சென்னையிலும், பேரிடர் மீட்புப் படை தலைமையகத்திலும் மூன்று பட்டாலியன் அணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
18.12.2023 அன்று அனுப்பப்பட்டுள்ள கூடுதல் மத்தியப் படைகளின் விவரங்கள்
இந்திய விமானப் படை சார்பாக 2, கடலோரக் காவல்படை சார்பாக 3 என 5 ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களுடன் கடலோரக் காவல்படையின் ஒரு கப்பல். இராணுவம் சார்பாக 2, கடலோரக் காவல்படை சார்பாக 7, பேரிடர் மீட்புப் படை சார்பாக 6 என 15 மீட்புக் குழுக்கள். மேலும், தென்தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய குழுவையும் அமைத்துள்ளது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு,நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் இந்த விரைவான நடவடிக்கைகள் மூலம், வெள்ளச் சூழலில் இருந்து தென் மாவட்டப் பொதுமக்கள் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளோம். மாநில முதல்வர் மீட்புப் பணிகளில் அரசியல் செய்யாமல் அரசு இயந்திரத்தை இயக்கவேண்டும், மாநில அரசு ஸ்தம்பித்து நிற்பதால், மற்ற பணிகளை ஒதுக்கிவிட்டு, நாங்கள் மக்களுடன் களத்தில் நிற்கிறோம் என அண்ணாமலை விடுத்துள்ள செய்தியிகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.