எச்,ராஜாவுக்கு ஆளுநர் பதவி கிடைத்தால் தனக்கு சந்தோஷம் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பாக TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சிக்காக, ‘தாமரை இலவச போட்டித் தேர்வு’ என்ற மையத்தை பாஜக-வின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டப்பேரவையில் துணை வேந்தர்கள் மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை தயார் செய்து இருக்கிறார். பாஜக இந்த மசோதாவை அங்கேயே எதிர்த்தது. திமுக அரசு துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாக அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாக வைத்து உள்ளது. திமுக இதற்கு முன்பே துணை வேந்தர்களை எந்த அளவிற்கு வியாபாரமாக மாற்றி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
பல நல்ல துணை வேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். இருப்பினும் ஆளுநரே எந்த துணை வேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை. தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது. இதில் மாநில அரசின் தலையீடும் உள்ளது. இந்த செயல் திமுக அரசியல் காழ்புணர்ச்சியுடன் இதை நடைமுறை செய்கிறது என்று அண்ணாமலை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எச்.ராஜா கேரளா ஆளுநராக வர உள்ளாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. நான் தேர்வுக் குழுவில் இல்லை.
இருப்பினும் எச்.ராஜா ஒரு நல்ல மனிதர். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷமே என்று தெரிவித்தார்