தேனியில், அரிசி கொம்பன் (arisi kompan) யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த செக்யூரிட்டி ஊழியர் ஒருவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனிதர்கள் வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுப்பட்டு வருவதால் யானைகளின் வழித்தடம் அடைக்கப்பட்டு, தனது வழி தடத்தை தேடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதனால், மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஊருக்குள் புகுந்து 18க்கும் அதிகமானோரை கொன்ற அரிசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக யானையின் கழுத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தி தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு சென்று விட்டனர்.
பின்னர், தொடர்ந்து யானை செல்லும் பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், தமிழக வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தது. அங்கு நுழைந்த அரிசி கொம்பன் யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.
இந்நிலையில், அங்கிருந்து லோயர்கேம்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிசி கொம்பன் கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்தது.
இதனால், தமிழக மற்றும் கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களையும், அங்கு பணியில் இருந்த பணியாளர்களையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர், கூடலூர் கம்பம் பகுதியில் நுழைந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி அன்று அதிகாலையில் கம்பம் கூலத்தெருவில் புகுந்து பொதுமக்களை விரட்டியது.
அப்போது, அந்த வழியாக தனியார் செக்யூரிட்டியாக பணிசெய்து வந்த 65 வயதாகும் பால்ராஜ் என்பவர் இரவு பணிமுடிந்து காலை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது அவரை அரிசி கொம்பன் யானை தள்ளிவிட்டது. இதில், அவருக்கு தலையில் பலத்தகாயங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில், அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு கடந்த இரண்டு தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவருக்கு மூளைப்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரிசி கொம்பன் யானை தாக்கி ஒருவர் பலியான இந்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.
இதனையடுத்து 3 கும்கி யானைகள் உதவியோடு அரிசி கொம்பனை மீண்டும் பிடிக்க வனத்துறைனர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.