உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணிக்கு கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது .
இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரரும், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள அஸ்வின் இடம்பெறவில்லை. முக்கிய போட்டியில் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணி தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ்க்கு தகுந்தார் போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வு செய்து இந்தியா தவறு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஜடேஜாவை விட டெஸ்ட்டில் அஸ்வின் அவர்களுக்கு சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்தியா அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.