உத்தரப் பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி ஒன்றின் முதல் மாடி பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்தனர். மேலும், ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பராபங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறியதாவது,
“தனியார் நிறுவனத்தின் “அவாத் அகாதமி” என்ற பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை பிரார்த்தனை கூட்டத்துக்காக பெருமளவிலான மாணவர்கள் முதல் மாடி பால்கனியில் கூடியுள்ளனர். அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
இதையும் படிங்க : பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை : கைதி சிவராமன் மரணம் – அண்ணாமலை சந்தேகம்!!
உடனடியாக காயமடைந்த குழந்தைகளை அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்த மாணவர்களில் ஐந்து குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த விபத்து நடந்தவுடன் காயமடைந்த 40 குழந்தைகள் உடனடியாக ஜஹாங்கிரபாத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிசிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
மருத்துவமனைகளில் முகம், கழுத்து, கை கால்களில் அடிபட்டு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.