ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மே மாதம் முழுவதும் தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்யத் தொடங்கிய மழை, தற்போது வரை நீடித்துக் வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் பகுதிகளில் இரண்டு, மூன்று நாட்களாக கனமழை பெய்தது.
இந்த நிலையில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதே போல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அதே நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்கள் கடலில் இறங்கத வண்ணம் கண்காணிக்கவும் 24 மணி நேரமும் சுழற்சி முறையினர் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.