ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை தொடரும் எனவும், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழக அரசு சார்பில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கபட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதையடுத்து, இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ரவிந்தர் பட் மற்றும் அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும் எனவும், பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீது விதிக்கப்பட்ட தடை சரி எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள வழிகாட்டுதலின்படி மறு பரிசீலனை செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.