பாங்காக்கில் கடந்த 26 ஆண்டுகளாக 49 மாடி கட்டிடம் ஒன்று (கோஸ்ட் டவர்) பொதுமக்கள் செல்ல பயப்படுவதால் காலியாக உள்ளது.
உலகளவில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களில் ஒன்றான பாங்காக் முழுவதும் வெறிச்சோடிய கட்டிடங்கள் பல காணப்படுகின்றன. அங்கு தனித்துவிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டிடத்திற்கு பின் ஒரு வரலாறு உள்ளது.
அந்த வகையில், 49-மாடி வானளாவிய கட்டிடம் ஒன்று கடந்த 26 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனை அங்குள்ள மக்கள் கோஸ்ட் டவர் என்று அழைக்கின்றனர். ஆனால் இந்த கட்டிடத்தின் உண்மையான பெயர் சாத்தோர்ன் யூனிக் டவர் ஆகும்.
இந்த கட்டிடத்திற்குள் நுழைய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக கட்டிடத்திற்குள் நுழைந்து வீடியோக்களை எடுத்து, அவற்றை YouTube மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கட்டிடத்தை புகழ்பெற்ற தாய்லாந்து கட்டிடக்கலை நிபுணரும் டெவலப்பருமான ரங்சன் டோர்சுவான் கட்ட ஆரம்பித்தார். 1990 ஆம் ஆண்டில் இந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கான பணிகள் தொடங்கியது. ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 1993ஆம் ஆண்டு டோர்சுவான் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் 2010-ல் தான் அவர் விடுவிக்கப்பட்டார். இதனிடையே 1997-ல் ஆசிய நிதி நெருக்கடி, தாய்லாந்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததனால் இந்த சாத்தோர்ன் கட்டிடத்தின் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 80% முடிக்கப்பட்ட இந்த கட்டிடம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த கட்டிடம் ஒரு பழங்கால புதை குழியில் கட்டப்பட்டதால் தான் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், அங்கு பேய்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும், கடந்த 2014 டிசம்பர் மாதம் இந்த கட்டடத்தின் 43வது மாடியில் தூக்கில் தொங்கியபடி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டநிலையில், பேய்கள் பற்றிய கதைகள் அதிகமாக பரவத் தொடங்கியது.
இந்த கட்டடம் மிகவும் பிரபலமானதால் கடந்த 2017 ஆம் ஆண்டின் திகில் திரைப்படமான ‘தி ப்ராமிஸ்’ இந்த கட்டிடத்தில் தான் படமாக்கப்பட்டது. மக்கள் இங்கு நுழைவதைத் தடுக்க கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, ஆனால் பாதுகாப்புப் பணியாளர்கள் கூட இந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அஞ்சுகின்றனர்.