பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வேலை நிறுத்தம் தொடா்பாக, கூடுதல் தொழிலாளா் ஆணையா், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் நிா்வாகிகள், நிதித்துறை பிரதிநிதிகள் அடங்கிய பேச்சுவாா்த்தை கூட்டம் மும்பையில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தனியாா் மயத்துக்கான மசோதா தாக்கல் செய்வதை திரும்ப பெற்றால், வேலைநிறுத்த முடிவைத் திரும்பப் பெறுகிறோம் என்று வங்கி ஊழியா் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் அதற்கான முனைப்பு காட்டப்படவில்லை. இதையடுத்து, பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
மேலும், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, திட்டமிட்டப்படி இரண்டு நாள் வேலை நிறுத்தம் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் போது சாமானிய மக்களின் முதலீட்டிற்கு ஆபத்து நேரலாம் என வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனக்கூறி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியா்களின் சங்கப் பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாசலம் கூறியபோது இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் 80,000 ஊழியா்களும், நாடு தழுவிய அளவில் 10 லட்சம் பேரும் பங்கேற்கின்றனா்.
இதன் காரணமாக, தமிழகத்தில் .10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 11 லட்சம் காசோலைகளும், நாடு முழுவதும் 37,200 கோடி ரூபாய் மதிப்பிலான 40 லட்சம் காசோலை பரிவா்த்தனைகளும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதே நேரத்தில், இணையவழி சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும், ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி நிா்வாகங்கள் தெரிவித்துள்ளன.