குற்றால அருவிகளில் குளிக்கத் தடை..!

ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசுடன் இணைந்து சுகாதாரத் துறை செயல்படுத்தி வருகிறது.

இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 20ஆம் தேதி முதல் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

அதேபோல் வடகிழக்கு பருவமழை குறைந்து தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்பட்டது. அண்டை மாநிலங்களான கேரளாவில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகளும் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை குற்றால அருவிகளில் குளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மூன்று தினங்களுக்கு குற்றாலம் பேரருவி ,பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகியவற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts