சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தக காட்சி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் புத்தகக் காட்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ரூ.100 கோடி மதிப்பில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் தேங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவை தெரிவிப்பதாக முதல்வர் பதிலளித்திருந்தார்.
45-வது சென்னை புத்தக காட்சி கடந்த ஜன.6-ம் தேதி முதல் ஜன.23-ம் தேதி வரை நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணாமாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டது. இதன் காரணமாக சென்னை புத்தகக் காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படடது.
இந்த நிலையில், கரோனா பரவல் குறையத் தொடங்கியதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், வரும் பிப்.16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சியை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.