கர்நாடகாவில் பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவர் பாஷப்பா என்றழைக்கப்படும் ஹுச்சா பாஷ்யா.இவருக்கு 40 முதல் 45 வயது இருக்கும். மனநலம் பாதிக்கப்பட்ட இவர், சிறுவயது முதலே ஹூவினா ஹதகலி பேருந்து நிலையத்தில் தான் வழக்கமாக இருப்பார்.
யாசகம் வாங்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய்க்கு மேல் வாங்கமாட்டார். அப்படியே யாரும் 1 ரூபாய்க்கும் மேல் அதிகமாக காசு கொடுத்தால் பாஷப்பா அதை திருப்பி கொடுத்து விடுவார். இதனால் அங்கு எல்லோரிடமும் பரிட்சையமான பாஷப்பா கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கினார்.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரண செய்தியை அறிந்த ஹதகலி பகுதி மக்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர்.
இந்த நிலையில், அவரது உடலை பொதுமக்களே பெற்றுகொண்டு, அப்பகுதியிலுள்ள வியாபாரிகள், சில தொண்டு அமைப்புகள் சேர்ந்து நிதி வசூல் செய்து பாஷப்பாவின் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
முன்னதாக அப்பகுதியில் வசிக்கும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி கூறுகையில், பாஷப்பா ஹூவினா ஹதகலில் பகுதியில் சிறுவயது முதலே வசித்து வருவதாகவும், இங்குள்ள மக்கள் அவருக்கு உணவு கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவர் இப்பகுதி மக்களுக்கு நன்கு தெரிந்தவராக இருந்தார் எனவும் தெரிவித்தார். பாஷப்பா எப்போதும் இருக்கும் இடத்தில் இல்லையென்பதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்து பல பகுதிகளில் தேடிவந்ததாகவும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் பாஷப்பாவின் இறுதி ஊர்வலத்தில் 4 ஆயிரம் பேர் கலந்திருப்பார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.