பெற்ற தாயே குழந்தையை முதலையிடம் கொடுத்துவிட்டு நகைகளை பத்திரப்படுத்திய சம்பவம் மனதை வேதனையில் ஆழ்த்துவதாக பாக்யராஜ் (bhagyaraj) தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற தலைப்பில் தன்னை வேதனையில் ஆழ்த்திய சம்பவங்களை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கதை போல கூறி வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்ட வீடியோவில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.
அந்த வீடியோவில் கோவை மேட்டுப்பாளையம் அருகே, அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் கொலைகள் நடைபெறுவதாக இயக்குநர் பாக்கியராஜ் (bhagyaraj) கூறி இருந்தார்.
அதாவது அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் நீராடும் நபர்களை சிலர் நீருக்குள் அழுத்தி கொலை செய்வதாகவும், அவர்களின் உடல்களைத் நீருக்குள் தேட உறவினர்களிடம் பணம் கேட்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , இது வதந்தி என கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் ‘உண்மைச் சம்பவம் என கூறி பாக்கியராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசும் பாக்யராஜ், “வடநாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது. அங்கு, ஆற்றில், ஒரு கரையில் இருந்து இன்னொரு கரையில் உள்ள ஊருக்கு படகுகளை பயன்படுத்தி செல்வார்கள்.
ஒரே நேரத்தில் படகின் அளவுக்கு தகுந்தது போல 20, பேர் வரை செல்வார்கள். சில நேரங்களில் படகோட்டிகள், காசுக்கு ஆசைப்பட்டு அதிகமாக 30 பேரை வரை படகில் ஏற்றிச் சென்று விபத்தில் சிக்குவதும் உண்டு.
அதைவிட கொடுமையான சமாச்சாரம் நடந்துள்ளது. ஒரு படகோட்டி சுமார் 20, 25 பேர் வரை ஏற்றிக்கொண்டு ஆற்றில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது குழந்தை ஒன்று படகின் ஓரமாக அமர்ந்து, ஆற்றுத் தண்ணீரில் கையை விட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது ஒரு முதலை குழந்தையின் கையை கவ்வி உள்ளது.
முதலை இழுக்க, குழந்தையின் அம்மாவும் குழந்தையை விடாமல் பிடித்து இழுத்துள்ளார்.
ஒருபக்கம் முதலை குழந்தையை கவ்வி இழுக்க, இன்னொரு பக்கம் குழந்தையின் தாய் விடாமல் இழுத்து பிடித்துள்ளனர்.
இதனால் படகு வேகமாக அசைந்து கவிழும் நிலை ஏற்பட முதலை குழந்தையை விடாது, குழந்தையை விட்டு விடுங்கள், இல்லையென்றால் படகு கவிழ்ந்து எல்லோரும் போய்விடுவோம் என படகில் இருந்த மற்றவர்களும் கத்துகிறார்கள்.
இதையும் படிங்க : electoral bond scheme ரத்து! காங்கிரஸ் வரவேற்பு!
ஆனால், பெற்றவர்களால் எப்படி குழந்தையை முதலைக்கு கொடுக்க முடியும்?
அங்கிருப்பவர்களே குழந்தையை இழுத்து முதலையிடம் விட்டு விடுவார்கள் என்ற நிலையில் வேறு வழியின்றி குழந்தையை விட தாய் தீர்மானித்துள்ளார்.
அப்போது, குழந்தையின் கழுத்தில், காதில் இருந்து நகைகளை எல்லாம் அவசர அவசரமாக கழற்றிவிட்டு, அந்த குழந்தையை ஆற்றில் விட்டுள்ளார்.
கண்முன்னே குழந்தையை முதலையிடம் விடுவதே ஜீரணிக்க முடியாத விஷயம். அதைவிட கஷ்டமாக இருந்தது, அந்த நேரத்திலும் முடிந்தவரை நகைகளை காப்பாற்ற முயன்றது, மனதுக்கு அவ்வளவு நெருடலாக இருக்கிறது” என கலங்கியபடி பேசியுள்ளார் பாக்யராஜ்.