பிக்பாஸ் சீசன் 7-ல் நடிகை விசித்ரா சினிமா வாழ்க்கையில் தனக்கு நடந்த ஒரு மோசமான தருணத்தை பற்றி பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7-ல் நேற்றைய எபிசோட்டில் ஹவுஸ் மேட்ஸ்ற்கு தங்களுடைய வாழ்கையில் நடந்த ஒரு பூகம்பத்தை பற்றி பகிர வேண்டும் என ஒரு டாஸ்க் கொடுப்பட்டது. அப்போது எல்லோரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் பற்றி கூறினார். அந்தவகையில் நடிகை விசித்ராவும் அவரது சினிமா வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான தருணத்தை பற்றி பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகை விசித்ரா சமீபத்தில் குக்வித் கோமாளி ஷோ மூலம் அதிகம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இந்த சீசனில் முக்கிய போட்டியாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் 51வது எபிசோடான நேற்று போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அந்த டாஸ்கின் போது பேசிய விசித்ரா, நான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஷூட்க்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்தேன், அப்போது ஒரு நாள் இரவில் அந்த படத்தின் ஹீரோ என்னை பார்த்து பெயரைகூட கேட்காமல், “இந்த படத்துல நீ நடிக்கிறயா. ரூமுக்கு வா” என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
ஆனால், நான் அங்கு செல்லாமல் அன்று இரவு எனது ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். அப்போது இருந்து பல்வேறு சிக்கல்களை எனக்கு கொடுத்தார்கள். தினமும் மாலை 6 மணிக்கு மேல் ஆனால் குடித்துவிட்டு என் அறையை வந்து தட்டுவார்கள். அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என வருத்தத்தில் இருந்தேன். அதனால், நான் தங்கியிருந்த ஹோட்டலில் எனக்கு எந்த போன் கால் அழைப்பு வந்தாலும் கனெக்ட் செய்யாதீர்கள் என்று கூறி உதவி கேட்டேன்.
அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் என் கணவர். அவர் தான் எனது நிலைமையை புரிந்து கொண்டு எனது அறையை மாற்ற உதவி செய்தார். அதுமட்டுமல்லாமல் நான் எந்த அறையில் இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக எனக்கு அந்த படத்தின் சூட்டிங் முடியும் வரை தினமும் ஒரு அறையை மாற்றி கொடுத்தார்கள்.
இப்படியே போய்க்கொண்டிருந்த சூழலில் ஒரு நாள் படத்தின் ஷூட்டிங் அங்குள்ள ஒரு கிராமத்தில் நடந்தது. அப்போது ஒரு காட்சியின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் என்னை தகாத முறையில் தடவினார். ஒருமுறை இரண்டு முறை அல்ல பல முறை அப்படி நடந்தது. அன்று நடந்த அந்த சம்பவதின் போது நான் அந்த நபரின் கையை பிடித்து நீ யார் என்று எனக்கு தெரியும் என்றது கூறி அவரை வெளியே இழுத்து கொண்டு நேராக ஸ்டாண்ட் மாஸ்டரிடம் போய் கூறினேன். ஆனால் அவரோ என் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.
எனக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தவறு செய்தவரை தண்டிக்காமல் என்னை எதற்காக அவர் அறைய வேண்டும். சுற்றி பார்த்தால் அங்கிருந்த ஒருவரும் எனக்கு ஆதரவு கொடுத்து குரல் எழுப்பவும் இல்ல. இதனால், மனமுடைந்து ஆதங்கத்துடனும், அழுகையுடனும் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
அதின் பிறகு இந்த சம்பவம் பற்றி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அங்கும் எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. இதெல்லாம் சகஜம் தான். இதை விட்டுட்டு போய் வேறு வேலையை பாருமா என சங்க தலைவர் கூறியது எனக்கு இப்போது நினைவில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதற்கெல்லாம் சங்கத்திற்கு வராதீங்க, போய் போலீஸ்ல புகார் கொடுங்க என வெளிப்படையாகவே சொன்னாங்க.
இதனால், தான் இப்படிப்பட்ட சினிமா துறையே வேண்டாம் என நினைத்து அன்றுமுதல் சினிமாவை விட்டே விலகிவிட்டேன். எனக்கு சினிமா மீது இருக்கும் மிகுந்த ஆசை எல்லாம் உதறிவிட்டு குடும்பம் என வாழ்ந்து விட்டேன். என்னை பொறுத்தவரை அந்த மோசமான ஒரு கட்டத்தில் என்னை எனக்கு ஆதரவு கொடுத்து என்னை காப்பாற்றியது என் கணவர் தான். அவர் தான் எனக்கு ரியல் ஹீரோ.. என கண் கலங்க பேசியுள்ளார் விசித்ரா.
விசித்திரா பகிர்ந்துள்ள இந்த விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், யார் அந்த டாப் ஹீரோ என்ற தேடலில் இறங்கினர் நெட்டிசன்கள். விசித்ரா சொல்லியிருக்கும் தகவலின் படி கடைசியாக கிராமத்து பெண்ணாக கடந்த 2001ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான படங்களின் லிஸ்ட்டை ஆராய்ந்ததில் அந்த பிரபல ஹீரோ தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும், இதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.