திமுக தங்களின் ஊழல் குற்றச்சாட்டுக்களையும், மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள கோபத்தையும் மாற்றுவதற்கு மொழியை ஆயுதமாக பயன்படுத்தி அரசியல் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா குழந்தைகள் மருத்துவமனையில் இன்று (14.4.2022) பிறந்த குழந்தைகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும்போது, இன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்க பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இவற்றை தொடர்ச்சியாக நடத்த உள்ளதாகவும் கூறினார்.
இந்தி மொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை அனைவரும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறிய அண்ணாமலை, இந்திய அரசு புதிய கல்வி கொள்கையில் என்ன கூறி இருக்கிறதோ அவை தான் அதிகாரப்பூர்வ முடிவு என்று கூறினார். அதன்படி புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழி கட்டாயம் படிக்கவேண்டும் என்றும், அது மாணவர்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல் திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளதாலும் அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாலும் அதனை மாற்றுவதற்காக மொழியை ஆயுதமாக பயன்படுத்தி அவர்கள் தங்களை தற்காத்து வருவதாக கூறினார்.
பீஸ்ட் படத்தில் இந்தி தெரியாது என்ற வசனம் குறித்த கேள்விக்கு, படத்தில் உள்ள கருத்தை படமாக தான் பார்க்க வேண்டும் என்று கூறி அண்ணாமலை, தமிழக பாஜகவிற்கும், திரை துறையினருக்கும் நல்ல ஒரு உறவு இருப்பதாகவும், இந்தி திணிப்பு இல்லை என்று பிரதமர் மோடியை கூறியபின் தமிழக அரசு ஏன் தமிழை வைத்து அரசியல் செய்கிறது என்று கேள்வி எழுப்பினார்.