முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நாளைய தினம் 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டும் இன்றி இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “சபரிமலை ஐயப்பன் கோவிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் வழிபடச் செல்லும் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களைச் சிரமத்திற்குள்ளாக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில், தமிழக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.