பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கபில் சிபல் வெளியிட்டுள்ள பதிவில்,
“என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. மற்றொரு கூட்டணிக்கட்சி அவர்களை (பாஜக) விட்டு வெளியேறியிருக்கிறது. தற்போது அவர்களுடன் இருப்பவர்கள் எல்லாம் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர். மகாராஷ்டிராவில் பவார் மற்றும் ஷிண்டே, வடகிழக்கு கூட்டணிக்கட்சிகள், பாஜக எப்போதும் கூடாரத்தில் இருக்கும் ஒட்டகம் போன்றது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜகவுடனான தங்களின் 4 கால உறவினை முறித்துக்கொண்டு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக நேற்று (25,09.23) திங்கள் கிழமை அறிவித்தது.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள கபில் சிபல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளதால் தனது எக்ஸ் பக்கத்தில் மேற்கண்ட பதிவினை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸில் இருந்து வெளியேறி, சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு மாநிலங்களவைக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.