சோழவரம் அருகே கலப்பட ஆயில் (Blended oil) தயாரித்த தொழிற்சாலையின் மேலாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் டேங்கர் லாரி, 2.70 லட்சம் லிட்டர் கலப்பட ஆயில் (Blended oil) மற்றும் ஆயில் தயாரிப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த நல்லூரில் கலப்பட ஆயில் தயாரிப்பதாக செங்குன்றம் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை சோழவரம் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு போலியாக கலப்பட ஆயில் தயாரிப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கலப்பட ஆயில் நிறுவனத்தின் மேலாளர்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக், முகேஷ் குமார் மற்றும் கலப்பட ஆயில் தயார் செய்த ஊழியர்கள் ராம் சிங் , பிந்திர பிரசாத், அசோக்குமார், தீபக், மன்சாராம், கலப்பட ஆயில்களை டேங்கர் லாரிகளில் ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் பண்ருட்டி தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த உதயராஜ் , திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், 2 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில், 1 லாரி மற்றும் கலப்பட ஆயில் தயாரிப்புக்கு உபயோகிக்கப்பட்ட டேங்கர்கள், மோட்டார்கள் மற்றும் மூலப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள், பறிமுதல் செய்யப்பட்டவற்றை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கலப்பட ஆயில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? எந்தெந்த இடங்களுக்கு இங்கிருந்து செல்கிறது? யார் யாருக்கு இதில் தொடர்பு? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.