கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.
உலகில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பபட்டு வருகிறது. ஆனாலும் சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே சர்வதேசம் அங்கீகாரம் அளித்துள்ளது. அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது.
ஆனால் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க மறுத்து தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவில் இருந்து வருவோர் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திக் கொண்டாலும் தங்கள் நாட்டுக்குள் வரும் போது 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என பிரிட்டன் அறிவித்தது. இந்த அறிவிப்பு இந்திய பயணிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதிய அறிவிப்பை பிரிட்டன் அறிவித்துள்ளது. கோவிஷீல்டு உள்பட தங்கள் நாட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வரும் 11ம் தேதி முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. .