ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கத்ரா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் (bus falls) 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 55 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்முவில், மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் அதிக பாரம் ஏற்றப்பட்டதாகவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாலும் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கை கிட்டத்தட்ட முடிந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறுகையில், “விபத்தில் பலியானோர் குறித்து கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஜம்முவின் ஜஜ்ஜார் கோட்லியில் நடந்த இந்த பேருந்து விபத்தில் (bus falls) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என்று கூறினார்.
இந்நிலையில், பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.