“அந்த மனசு தான் சார் கடவுள்” – உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி செய்த மாமனிதர்..!

பெரம்பலூர் அருகே குரங்கிற்கு முதலுதவி செய்து காப்பாற்றிய மாமனிதருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் கடந்த 9ம் தேதி குரங்கு ஒன்றை, தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. அதில் படுகாயமடைந்த குரங்கு, மரத்தில் ஏறி தப்பித்து, கிளையில் படுத்தவாறு மயக்கமடைந்தது. இதனை கண்ட கார் ஓட்டுநர் பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறக்கினார்.

மேலும், மூர்ச்சையான குரங்கிற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த அவர், நண்பர்கள் உதவியுடன் பெரம்பலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பாதி வழியில் குரங்கின் தலை துவண்டு விழுந்தது. குரங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த பிரபு, வாகனத்தை நிறுத்திவிட்டு குரங்கை தரையில் கிடத்தி, அதன் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி முதலுதவி செய்தார்.

ஆனாலும், எந்த அசைவும் ஏற்படாததால், குரங்கு என்பதை யோசிக்காமல் அதன் வாயோடு, தன் வாயை வைத்து ஊதினார்.

இதனை பிரபு தொடர்ந்து செய்தநிலையில், குரங்கு மூச்சு விட தொடங்கி கண் விழித்து பார்த்தது. பிறகு, அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் உதவியுடன் குரங்கிற்கு தண்ணீர் வழங்கினார்.

குரங்கை காப்பாற்றி விடலாம் என தீர்மானித்த பிரபு, வேகமாக வாகனத்தை இயக்கி பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து குரங்கை காப்பாற்றியுள்ளனர்.

பிறகு, குரங்கினை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். பிரபுவின் செயலை அவரது நண்பர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பிரபுவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Total
0
Shares
Related Posts