பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ-வும் நடிகருமான எஸ்.வி.சேகர் (s-ve-shekher0) மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயவேல் முன் நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், மனுதாரரான அய். கோபால்சாமி, எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.