கடந்த ஒரு மாத்தில் மட்டும் 4வது முறையாக இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
“கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதோடு, 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை மற்றும் உபகரணங்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த 4 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை கடற்கொள்ளையர்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அம்மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்ய ஏதுவாக இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்துவதோடு, இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற மீனவர்களின் உபகரணங்களை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக” தெரிவித்துள்ளார்.