வரும் டிசம்பர் 4ம் தேதி நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ,இந்த ஆண்டின் கடைசி கூட்டத் தொடர் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு ஒரு நாள் முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும்.
ஆனால், டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், இம்முறை ஒரு நாள் முன்னதாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ந் தேதி வெளியிடப்பட உள்ளன.
அதில் ,5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிறகு குளிர்கால கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.