தமிழ்நாட்டில், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைம், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் திருப்பூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளர்.
11.09.2023 முதல் 12.09.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகரில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இவோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.