கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் கடந்த 5ஆம் தேதி நுழைந்தது.
பின்னர், ஆக.16 ஆம் தேதி இறுதி சுற்றுவட்டப் பாதையில் உயரம் வெற்றிக்கரமாக குறைக்கப்பட்டு நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவில் விண்கலம் பயணித்தது.
ஆக.17 ஆம் தேதி பெங்களூருவில் இஸ்ரோ மையத்தில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சரியாக மதியம் 1.15 மணிக்கு உந்து சக்தி கலனில் இருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர்.
தொடர்ந்து, ஆக.18-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது. அதன் பின்னர், 2வது முறையாக ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.
மேலும், இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திராயன் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களையும் வெளியிட்டது.
அதையடுத்து இன்று (23.08.23) சரியாக மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரலை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ நிகழ்வில் இணையவழியில் இன்று பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திட்டமிட்டபடி லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவர் சாதனமும் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் பட்சத்தில், நிலவின் தென் துருவத்திற்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.